பத்தாயம்
பத்தாயம்
Latha Kumar: வாமடை பத்தாயம் விளக்கம் அளிக்க முடியுமா?
Shan: மடை என்பது நீர் போகும் ஒரு வழி என்பது நமக்கு தெரியும். ஏரி குளம் ஆறுகளில் பார்த்து இருப்போம். அதே போல வயலிலும் இரு மடைகள் உள்ளது. நீர் உள்ளே வரும் வழி வாய்மடை . நீர் வெளியேறும் வழி வடிமடை. அந்த வாய்மடை தான் வாமடை என்று எங்க வட்டாரத்தில ( தஞ்சை புதுகை) சொல்லுவோம். அது ஒரு வட்டார வழக்குச் சொல்.. மழைக் காலத்தில்( ஐப்பசி) பெரும் மழை பெய்வதினால் வயலுக்கு நீர் தேவையில்லை. ஒரு வேளை அதிக நீர் வரத்து வாமடை வழியாக வந்தால் வயலின் வரப்புகள் தாங்காமல் உடைப்பு ஏற்ப்படும். அதனால் மழைக் காலங்களில் வாமடை எப்பொழுதும் அடைத்து ( கட்டி) இருக்கும். வடிமடை வழியாக உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக்கும். 😊
Shan: பத்தாயம். விவசாய வீடுகளில் நெல் விதைகளை மற்றும் மற்ற தாணியங்களை சேமித்து வைக்க பயன்படும் மரத்தினாலான ஒரு வகை பல அடுக்குகளை கொண்ட உயரமான பெட்டியே பத்தாயம். நாம் அதை ஒவ்வொரு அடுக்காக இணைக்கலாம் அல்லது அகற்றலாம் பத்தாயத்தின் கீழ் அடுக்கில் சின்னதாக ஒரு கதவு போன்று அமைப்பு இருக்கும் அதை திறந்தால் நெல் வெளியே தன்னால் வந்துவிடும். தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு மீண்டும் அடைத்து விடலாம். பத்தாயத்தில் நெல்லை வைப்பதினால் பூச்சிகள் மற்றும் எலிகளிடமிருந்து நெல்லை எளிதாக பாதுகாக்கலாம். எங்க வீட்டு பத்தாயத்துல இப்ப எங்கம்மா மற்றும் என் மனைவிக்கு சீர் கொடுத்த வெங்கல பாத்திரங்கள் பத்திரமாக உள்ளது😂😃
Shan: பத்து+ஆயம்=பத்தாயம் ஆயிற்று. பத்து-பத்திரமான, பாதுகாப்பான; ஆயம் - கூட்டம், நெருக்கம், குவியல், சேர்க்கை. நெல் மணிகளின் கூட்டம். நெல்மணிகளின் குவியல், நெல் மணிகளின் சேர்க்கை, நெல் மணிகளின் நெருக்கம். பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைக்கப்படும் இடம் பத்தாயம் ஆயிற்று. எனவேதான் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் பேணப்பட வேண்டிய அந்த உயரிய ஆவணங்கள் பத்திரம் எனப்பட்டது. வரவு செலவுக் கணக்கு எழுதுகிற நாம் நமது பாதுகாப்பான அந்தக் குறிப்பேட்டுப் புத்தகத்தை பத்து அல்லது பற்று வரவுக் கணக்கு என்று சொல்லுகிறோம்.
Vinoth: அப்போது நான் சிறுவனாய் இருக்கும் போது பத்தாயத்தின் உள்ளே சென்று விளையாடுவோம். சற்று பெரியதாய் இருக்கும். நீளம் 6 அடி என நினைக்கிறேன். 4 அடுக்குகளும் 3 அடி அகலமும் உடையது. கிருஷ்டிணாபுரம் என்ற ஊரில் இருக்கும் எனது தாத்தா (என் சித்தியின் அப்பா) ஒரு விவசாயி. அவர் மாட்டுவண்டியில் சில மூட்டைகளை அறுவடை முடிந்த உடன் எங்கள் வீட்டுக்குக் கொண்டு வருவார். மாட்டு வண்டி பயணம் ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும். அவர் ஊர் செல்லும் போது சில சமயம் நானும் செல்வதுண்டு. எப்போதும் வெற்றிலை போடும் பாட்டியும் தாத்தாவும் நிறைய கதைகள் சொல்வார்கள். அரிசி மட்டுமே கிடப்பதால் பத்தாயத்தில் ஒரு தனி வாசம் வரும். உள்ளே சென்றால் நன்றாக வியர்க்கும். என் பதின்மவயது பத்தாயிரம் கதைகளை அடங்கியுள்ளது அந்தப் பத்தாயம். இன்றும் எனக்கு அதன் வாசனை நினைவில் உள்ளது.
Shan: அந்த கதைகள் எல்லாம் விதை நெல் போன்றது. எப்பொழுது எல்லாம் வாழ்க்கை சலிப்பாகிறதோ.. அப்பொழுதெல்லாம் பத்தாயத்தின் கதவுகளை மேலிழுங்கள்!!!
RAMCHANDAR M: குழந்தைகளிடம் பகிருங்கள்