அப்பாடக்கர்
அப்பாடக்கர்
Latha Kumar நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ? - சென்னை வட்டார வழக்கு
’ பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைபடத்தில் சந்தானம் பேசிய “நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ?” என்ற வசனம் இளைஞர்கள் மத்தியில் வைரலானது. தற்போது நாம் கூட பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவது உண்டு. அப்பாடக்கர் காமெடிக்காக சொல்கின்ற வார்த்தையல்ல. அப்படி ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்து வந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
’ அப்பாடக்கர் ’ வார்த்தை உருவான சுவாரசிய கதை இதோ…
அமிர்தலல் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி. குஜராத்தில் பிறந்த இவர் ஹரிஜன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.
சுதந்திரத்திற்கு முன்னால் மெட்ராஸ் மாகாணத்திலும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரை மெட்ராஸ் மக்கள் பாசமாக தக்கர் பாபா என்று அழைத்தனர். (குஜராத்தியில் பாபா என்றால் அப்பா என்று பொருள்).
தக்கர் பாபா பல துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்வார்.
இதனால், நாளடைவில் மெட்ராஸ் மக்கள் யாரையும் “பெரிய அறிவாளியா?” என்று கேலியாக குறிப்பிட “பெரிய அப்பா தக்கரா ?” என்று கேட்கத் தொடங்கினர்.
பின்னாளில் அப்பா தக்கரா என்ற வார்த்தை மருவி அப்பாடக்கர் ஆகிவிட்டது.
*டாப்பு டக்கர்டா என்பது சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வந்ததும் சென்னை வட்டார வழக்கின் மற்றொரு சொல்.
கூடுதல் தகவல்கள்:
தக்கர் பாபாவை கவுரவிக்க இந்திய அரசாங்கம் 1969 ஆம் ஆண்டு ஒரு தபால் தலையை வெளியிட்டது.
அமிர்தலால் விட்டல்தாசு தக்கர் ( 29 நவம்பர் 1869 - 20 சனவரி 1951)
ஆரம்ப கால வாழ்க்கை
இந்தியாவின் குஜராத் மாநில சௌராட்டிரா பகுதியில் உள்ள பவநகரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1869 நவம்பர் 29 அன்று இவர் பிறந்தார். இவரது தந்தை விட்டல் தாசு தக்கர் இவருக்கு அம்ரித லால் என்று பெயரிட்டார்.
இவர் தனது தந்தையிடமிருந்து மனிதநேயத்திற்கான நன்மை மற்றும் சேவைக்காக தனது முதல் படிப்பைப் பெற்றார்.
இவர் 1890 இல் புனேவிலிருந்து தனது கட்டிடப் பொறியாளர் உரிமத்தைப் பெற்றார். இவர் போர்பந்தரில் ஒரு பொறியாளராக பணிபுரிந்தார். சில காலம் சாங்குலி மாவட்டத்தின் தலைமை பொறியாளராகவும் பணியாற்றினார்.
பின்னர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் முதல் ரயில் பாதையை அமைப்பதில் பணியாற்றுவதற்காகச் சென்றார். பின்னர் மும்பை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றினார். மும்பை நகரம் முழுவதுமுள்ள தூய்மைப்பணியாளர்களின் பரிதாப நிலைமைகளை முதன்முறையாக பார்த்தார். அவர்கள் வாழ்ந்துவரும் மோசமான காலனிகளைக் கண்டு இவர் அதிர்ச்சியடைந்தார். அன்றுமுதல் இந்த மக்களுக்கு உதவ தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டார்.
பின்னர் சமூகப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். இவர் இந்திய சேவகர்கள் சங்கத்தில் உறுப்பினரானார். மேலும், தீண்டத்தகாதவர்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை ஆதரித்தார்.
1932 இல் மகாத்மா காந்தி நிறுவிய அரிசன சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரானார்.
அக்டோபர் 24, 1948 - பாரதிய ஆதிம்ஜதி சேவை சங்கம் இவரது முயற்சியினால் நிறுவப்பட்டது.
இந்தியாவின் தொலைதூர இடங்களுக்கும்*, மிகவும் கடினமான பகுதிகளுக்கும் சென்று பழங்குடியினர், அரிசனர் ஆகியவர்களின் நிலைமை குறித்து விசாரணை நடத்தினார். அரசியலமைப்பின் செயல்பாட்டில் இவர் மதிப்புமிக்க உள்ளீடுகளைச் சேர்த்தார்.
தனது வாழ்க்கையின் 35 ஆண்டுகளை பழங்குடி மற்றும் அரிசன மக்களின் சேவையில் கழித்தார்.
- இவர் அசாம், கிராமப்புற வங்காளம், ஒடிசாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குசராத்தில் பில் பகுதிகள், சௌராட்டிராவின் அரிசனப் பகுதிகள், மகாராட்டிராவின் மகர் பகுதிகள், சென்னையில் தலித்துகள், சோட்டா நாக்பூரின் மேட்டுநிலங்கள், தார்பார்க்கர் மாவட்டத்தின் பாலைவனம், இமயமலையின் அடிவாரங்கள், திருவிதாங்கூரின் கடலோரப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு பழங்குடி மற்றும் அரிசன மக்களின் மேம்பாட்டு நோக்கத்துடன் சென்றுள்ளார்.
மரியாதை
தக்கர் பாபா பெயரில் தக்கர் பாபா வித்யாலையா என்றொரு பள்ளியில் தி. நகரில் இன்றும் செயல்படுகிறது.
நன்கு அறியப்பட்ட ஒரு பகுதியான மும்பையில் உள்ள பாப்பா காலனிக்கு இவரது பெயரிடப்பட்டது.
ஏழை, பாதிக்கப்பட்ட மற்றும் முற்றிலும் பின்தங்கிய பழங்குடி சமூகத்திற்கு அர்ப்பணிப்பு சேவைகளுக்காக மத்தியப் பிரதேச மாநில அரசு இவரது நினைவாக ஒரு விருதை நிறுவியுள்ளது.
மகாராஷ்ட்ர அரசு 2007 ஆம் ஆண்டில் தக்கர் பாப்பா ஆதிவாசி வஸ்தி சுதாரனா என்ற ஆதிவாசி கிராமங்களையும் காலனிகளையும் மேம்படுத்தும் திட்டத்தை வகுத்துள்ளது.
தொகுப்பு : லதா குமார் 6/20/2023