போரும், போர் நிகழ்ச்சிகளும்...!
போரும், போர் நிகழ்ச்சிகளும்…!
Shan
கரிகாலன் பகைவர் நாடுகளைக் கைப்பற்றினான், அவன் கைப்பற்றிய ஊர்களில் மதில்கள் அழிந்தன. கூகைகள் இருந்து குழறின என்று #பட்டினப்பாலை கூறுகின்றது.
படையெடுக்கும் அரசனைச் சேர்ந்த வீரர்கள் பகைவர் நாட்டு ஊர்களைக் கொளுத்துதல் வழக்கம்; கோட்டைகளை இடிப்பது வழக்கம்; இந்த அழிவுகளை எல்லாம் #புறநானூறு பாடல்களில் காணலாம்.
பிற்கால அழிவுகளைக் #கலிங்கத்துப்பரணி பாடல்களில் விரிவாகக் காணலாம். “நீ படையெடுத்தால் பகைவர் நாடு அழிவுறுமே” என்று புலவர்கள் வருந்திப் பாடிய பாடல்கள் பல. இத்தகைய பாடல்கள் #கொற்றவள்ளை என்று பெயர் பெறும்.
அரசனது தலைநகரில் கட்டடங்கள் இடிக்கப்படும்; அந்த நிலம் கழுதைகளால் உழப்படும்: கவடி விதைக்கப்படும். வென்ற அரசர், வெல்லப்பட்ட நாட்டுக் குளங்களில் தம் போர் யானைகளை நீராட்டுவர்; வென்ற நாட்டில் தங்கள் வெற்றித் தூண்களை நாட்டுவர் அல்லது தங்கள் இலச்சினையைப் பொறிப்பர்.
வென்ற அரசர், தோற்ற அரசர் குடியிலிருந்து தம் காலுக்குரிய கழலைச் செய்து கொள்வர். வீரகங்கணமும் செய்து கொள்வர். இவை சங்க நூல்களில் காணப்பெறும் செய்திகள். #2 வென்ற அரசன் போர்க்களத்தில் செய்யும் வேள்வி #களவேள்வி எனப்படும். வென்ற அரசன், தோற்ற அரசன் மனைவியருடைய தலைமயிரைக் கயிறாக்கி, அதனைத் தன் தேரை இழுக்கப் பயன்படுத்துவதும் உண்டு.
தோற்ற அரசனுடைய பற்களைக் கோட்டைக் கதவுகளில் பதிய வைத்தலும் உண்டு. வெற்றி பெற்ற மன்னருள் சிலர் இங்ஙனம் கீழ்த்தரமாக நடத்தலும் உண்டு. இவை பற்றிய விவரங்களைப் #புறநானூறு, #பத்துப்பாட்டு மற்றும் #பதிற்றுப்பத்து பாடல்களில் காணலாம்.
போர் வீரருட் சிலர் தமது தனிப்போர் முறையால் சிறப்புப் பெறுதலும் உண்டு. அத்தகைய வீரன் போரில் உயிர்விட்டால், அரசனும் பிறரும் அவன் நினைவாக #வீரக்கல் நட்டு வழிபாடு செய்வர்.