ஆதியில் யானைகள் இருந்தன -நூல் விமர்சனம்
ஆதியில் யானைகள் இருந்தன -நூல் விமர்சனம்
Latha Kumar
உலகத்திலேயே ஒப்புமை கூற முடியாத ஒரு பெரிய விலங்கு யானை. சங்ககால இலக்கியம் முதல் சமகால இயற்கை
வரை தவிர்க்க முடியாத ஒரு விலங்கினம் யானை என்பதை மிக விரிவாகவும் விளக்கமாகவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிக எளிமையாக வாசிக்கும் விதத்தில் இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் இயற்கை சூழலியலாளர், களப்பணியாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஆசிரியர் திரு. கோவை சதாசிவம் அவர்கள்.
‘காடு’ இதழில் முதலில் வெளிவந்து, பின் வாசகர்களின் வரவேற்பைப் பெற்று ‘ஆதியில் யானைகள் இருந்தன’ என்ற கட்டுரையின் முழு வடிவமே இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தில் யானையின் உணவாக இயற்கை அளித்த 82 வகைத் தாவரங்கள், 59 வகை மரங்கள். 23 வகை புற்கள் முளைக்கும் காடுகளை நாம் இன்று அறிவியல் என்ற பெயரிலும் மனித வளர்ச்சி என்ற பெயரிலும் அழித்து வரும் காடுகளைப் பற்றியும் அதனால் யானைகளுக்கு வரும் பேரிடர்களையும் விளக்கிக் கூறியிருப்பது நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது.
பறவைகளின் வலசைப் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. நம்மில் எத்தனை பேர் யானைகளும் வலசை போகும் என்று அறிவோம்? அதேபோல் பறவைகள் தூது செல்வது பற்றி அறிவோம். யானை விடு தூது என்று ஒரு இலக்கியம் இருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? யானைகளின் உருவம் எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது அவைகளின் கருணையும் என்று என்றாவது அறிந்திருக்கிறோமா?
அதற்கு சிறந்த ஒரு உதாரணம் இது.
அந்தப் பழங்குடிகளின் மலைக்கிராம வயல்களின் நடுவே அதிகாலை நேரத்தில் சிறிதும் பெரிதுமாக நான்கு யானைகள். அரை ஏக்கரில் விதைத்த பயிர்களை யானைகள் கால் மணி நேரத்தில் காணாமல் செய்து விடும்… என்ன ஆச்சரியம் பாருங்கள். அந்த பழங்குடி மக்கள் யானைகளிடம்
"என்ற வயிறு சிறுசு
எங்காடும் சிறுசு
உன்ற வயிறு பெருசு
உன்ற காடும் பெருசு
வாயே வச்சுடாதே சாமி
வயலே விட்டுப் போயிரு "
என்று கெஞ்சிக் கேட்டதும், உடனே யானைகளும் தன் காதுகளை ஆட்டியாட்டி பழங்குடியினரின் வேண்டுகோளைக் கேட்டவிட்டு யானைகள் நின்று, நிதானித்து, சட்டென நகர்ந்து மறைந்தன. இப்படிச் சுவையான பல தகவல்கள் புத்தகம் முழுவதும் நிறைந்து நம்மை நெகிழ வைக்கிறது.
ஆதியில் யானைகள் இருந்தன என்பதை மாற்றி இனியும் அவை இருக்கும் என்று சொல்லும்படி நம்மாலான முயற்சிகளை செய்யத் தொடங்குவோம்.
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, யானைகள் இருந்தாலோ கோடானுகோடி நன்மை” என்பதை உலகம் உணரும் நாள் வர வேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தின் வாயிலாக உணர்த்துகிறார் ஆசிரியர்.
எனது இதயம் மிகவும் சிறியது
அதை யாரும் கண்டதுகூட இல்லை
இருந்தும் அதில் தான் எத்தனைத் துயரங்களை
ஏற்றி வைக்கிறாய்
இதோ பார்
உன்னுடைய விழிகளும் சிறியதுதான் அது
பெரும் உலகத்தையே
தனக்குள் வைத்திருக்கிறதே
என்றான்.
Indhira: யானைகள் குழந்தைகளை போல சொன்ன சொல் கேட்டு வயலை விட்டு செல்வதாக குறிப்பிட்டது மனதை தொடும் நிகழ்வாக உள்ளது😍
Latha Kumar: இது உண்மை சம்பவம் என்று சொல்கிறார் ஆசிரியர்.