திருவிழா ஞானம் - மூன்றாம் நாள்
திருவிழா ஞானம் - மூன்றாம் நாள்
காலையிலே கோணாரு பால் கறக்க வரல போல. இல்லைனா எந்திரிக்கும் போது கருப்பட்டி காப்பி வாசம் நாசியில உள்ளபோயி நடு உச்சியிலே சிலுப்பிவிடும். சிக்கிரி கலந்த காப்பிதூளும் திசையன்விளை கருப்பட்டியும் காப்பியை தேடி அலைய வைக்கும். கோணார் வராட்டி நான்தான் போய் மடியில கைவைக்கனும். எலேய் மாட்டுக்கு கழனியும் ரெண்டு வைக்கலையும் போடு நான் போய் பல்லை உடைச்சிட்டு வறேனுட்டு உமிக்கரியையும் உப்பையும் கேலண்டர்ல தேதி கிழிச்ச தாளுல மடிச்சி தெக்க பம்புசெட்டைப்பாத்து போனேன். வாய் கொப்பளிக்கும் போதே இன்னைக்கு என்னலாம் பண்ணனும்னு மனசுக்குள்ள ஓட்டி பாத்துகிட்டேன். பல்லை தேச்சிட்டு கறவை மடில கை வைச்சதிலேருந்து பொழுது சாயுற வரைக்கும் வேலை தலைக்குமேல இருந்ததுல நேரம் போனதே தெரியல. சேக்காளி கொத்தனார் மாரியப்பன் வந்து ரதவீதிக்கு போறோம்ல வரீயானு கூப்பிட்டதும்தான் அரக்க பரக்க கடைய சாத்திட்டு கிளம்பினேன். சைக்கிள் புதுசு, அதுல மாரியப்பனை டபுள்ஸ் ஏத்திட்டு போகனுமா? நான் ஓட்டுறேன்பாம். கொடுக்காம இருக்கமுடியாது..வேலை இருக்குனு மாரியப்பனை முன்னாடி போக சொல்லிட்டு சைக்கிள போய் செல்வம் கடையில போட்டுட்டு ரதவீதிக்கு போலாம்னு நம்பியார் மாதிரி திட்டம்போட்டு மாரியப்பனை கழட்டிவிட அவனை போக சொன்னேன். அவனும்,,சரில நேர மனோகர் ஹோட்டல் வந்துரு, சூடா ரெண்டு ஆமைவடை திம்போம்ல னு அவன் சொன்னதும் சரிதானு தோணுச்சி. மனோகர் ஹோட்டல் நல்ல பேமஸ் ஆனா கடை முதலாளி மனோகர் படு கஞ்சன். அங்க பில் போடுற பாவாடை எங்க கூட படிச்சவன்தான். அவன் சொல்லித்தான் தெரியும். ஹோட்டல்ல மிஞ்சுற சாப்பாடு எல்லாத்தையும் மீதி மிச்சம் இல்லாம அவர் வீட்டுல போய் கொடுத்தருனுமாம். கடை மாஸ்டர் முப்பிடாதிக்கு கைச்சுத்தம் கிடையாது..அப்பப்ப நீளும் அதுக்காக இப்படியா சாப்பாட்டை கூட வழிச்சி வீட்டுக்கு கொண்டு போறாரு. போகும் போது என்னத்தை கொண்டு போகப் போறாரு, தொண்டைக்கு கீழ நரகலுனு பேசுவான். நான் செல்வம் கடையில சைக்கிள போட்டுட்டுவரவும் மாரியப்னும் அங்கவந்தான்.
எங்கள பாத்ததும் பாவாடை “எலேய் திருவிழாக்கு கிளம்பிட்டீங்களானு"கேகக்குறதுலே தெரிஞ்சது தான் போக முடியலயே.இவனுக போறானுகளேனு ஏக்கப் பேச்சு. ஆமால, போயிட்டு கரகாட்டம்லாம் பாக்கனும்லானு மூணாந்திருவிழா ஷ்பெசல் கரகாட்டத்தை மாரியப்பன் நியாவப்படுத்தி பாவாடைய பெருமூச்சு விட வைச்சான். நல்ல மொறு மொறுனு ரெண்டு வடைய தின்னுட்டு பெருஞ்சீரகத்தை வாயிலே போட்டுக்கிட்டா வடைருசி நாசியிலே நிக்கும். சேச்காளியும் நானும் ரதவீதிக்கு போகும் போது இருட்டுகட்ட ஆரம்பிச்சிட்டு.
MGR கூட போட்டோ எடுக்குறதுக்குஅம்புட்டு கூட்டம் முட்டா பயலுக, அட்டை செஞ்ச MGR பக்கத்துல நின்னு போட்டோ எடுக்குறதுல என்ன இருக்கோ! “எலேய் மாப்பிளை” னு தெரிஞ்ச சத்தம் திரும்பி பாத்தா சோலையப்பன். எங்க ஊருதான், ஆனாஇப்ப பக்கத்து ஊருக்கு மூட்டை முடிச்சோட காலி பண்ணிட்டு போயிட்டாங்க. அவன் அப்பா தாசில்தார் ஆபீசுல பியூன், எதோ பத்திரம் டாக்குமெண்டுக்கு பத்து ரூவா லஞ்சம் கேட்டதா சொல்லி சஸ்பெண்டு பண்ணிதுல ஊருல தலைகாட்ட முடியாம பக்கத்து ஊருக்கு போயிட்டாங்க. ஏ, சோலையப்பா பாடாவதி இங்க என்னல பண்ணிட்டு இருக்கனு நான் கேக்கவும், சத்தம் போடாம இங்க வானு சைகையில காட்டவும் புரிஞ்சுகிட்டேன்.ரஜினி கூட போட்டோ எடுக்க நின்ன கூட்டத்துல மாப்பிளை முன்னாடி நின்னுட்டு இரூந்தான்…அரவம் இல்லாம கூட போய் நின்னுகிட்டோம். இந்த போட்டோவ எங்க இளைஞர்நற்பணி மன்றத்தில எந்த இடத்துல மாட்டினா நல்லாயிருக்கும்னு ரோசனை வந்துட்டு.
ஓருவழியா நடுசாமத்துல வில்லுப்பாட்டுமுடிஞ்சதும், செல்வம் கடையில போய் சாச்சிவவச்சிருக்கிற சைக்கிள எடுத்துட்டு போணும்..மாரியப்பனும் கூடவே வந்தான்..ஒன்னும் சொல்ல முடியல, டபுள்ஸ் போடனும்..அவன் கீழத்தெரு,,நான் மேலத்தெரு.வேற யாராது கீழத்தெருக்காரன் சைக்கிள்ல போனா, நீஅவன் கூடபோனு சொல்லி அனுப்பிடலாம் நினைச்சிகிட்டேபோய் பாத்தா விதி சதி செஞ்சமாதிரி சைக்கிள் காத்து இறங்கி கிடக்கு. மாரியப்பனை டபுள்ஸ் வைக்க இல்லை..நானே போகமுடியாது. நாலு பர்லாங் நடக்கனுமேனு, அதுவும் சைக்கிள உருட்டிக்கிட்டு போறதை நினைச்சாலே அசதி வந்துட்டு. அதுவும் ஞானயார் தோப்பு கல்லறை தோட்டத்தை தனியா தாண்டடி போகனுமேனுநினைச்சா லேசா பயம் வயித்தை கவ்வுசசு.
சைக்கிள் காத்திறங்கி கிடக்கிறதை பாத்ததும் மாரியப்பன், என்தோள்ல தட்டி” வா சேர்ந்து நடப்போம்னு" சொன்னதும் லேசாதெம்புவவந்தது. சைக்கிள செல்வம் கடையிலயே மறுடியும் சாத்திட்டு நடக்க ஆரம்பிச்சோம்.
வீடு போய் சேரும் போது சட்டைலாம் வேர்வை. அந்த மாதிரி நடை. சட்டைய கழட்டி கொடியில போட்டுட்டு படுக்கும் போது தோணிச்சி, புது வண்டினாலும் இனி மாரியப்பனை மட்டும் டபுள்ஸ் ஏத்திக்கலாம்னு. நல்லாருக்கும் போது கூட வறேனு சொல்லாதவன், பிரச்சனையப்ப கூட வந்தான். இனிமே அல்ப தனமா அவன்கிட்ட நடந்துக்கூடாதுனு ஞானோதயம் வந்துச்சு.