திருவிழா ஞானம் - ரெண்டாம் நாள்
திருவிழா ஞானம் - ரெண்டாம் நாள்
முதல் நாள் திருவிழா தான் முடிஞ்சிருக்கு..இன்னும் ஒன்பது நாள் இருக்கு.
நேத்து ராத்திரி கனவுல பெரிசு திரும்பவும் வந்து பெட்டுல காசு கட்டி ஏமாந்து போகாதீங்களனு சொல்லிட்டு போனது உறுத்திகிட்டே இருக்கு. இன்னைக்கு பெட் கட்ட போகக்கூடாது. நேத்து போயி நூறு ரூவா வெட்டியா போயிட்டுனு மனசுக்குள்ளே நினைச்சிகிட்டே அன்னைய பொழுது கமிஷன் மண்டில மிளகாய் வந்த கணக்கை முடிச்சிட்டு சாயங்காலம் பொழுது சாயவும் ஹெர்குலிஸ் வண்டிய எடுத்துட்டு கிளம்பினேன்.
ஒரு ரவுண்டு சுத்திட்டு தெக்குரதவீதியிலஇருக்கிற செல்வம் மரக்கடையில ஆஸ்பெஸ்டாஸ் சாய்ப்புல சைக்கிள சாத்திட்டு பொடி நடையா திருவிழா கூட்டத்தில ஐக்கியமானேன்.
மணியண்ணன் பெட்டி கடையில கோலி சோடா ஒன்னை குடிச்சிட்டு கணக்குல எழுதிட்டு நேரா குஜராத்காரன் கொண்டு வந்திருக்கிற ஒட்டகத்தை பத்தி எல்லாரும் பேசினதை கேட்டு அதை பாக்க கிளம்பினேன்.
ஒட்டகம் யானை அளவுக்கு தண்ணி குடிக்கும்னு துபாய்க்கு போயிட்டு வந்த தோஸ்து மஜீத் சொல்லி கேட்டுருக்கேன்.
அங்க போகும் போதே ஒன்னு வைச்சா பத்து..பத்து வைச்சா நூறுங்குற சத்தம் என்னையுமறியாம திரும்பி பாக்க வச்சது.
நேத்தைவிட கூட்டம் அதிகமா இருந்தது. சரி போய் பாப்போம் யாரு காசை விடறாங்கனு போனா..எல்லா பயலும் வேடிக்கை தான் பாக்குறாங்க. நேத்து நான் காசை விட்டதுக்கப்புறம் எவனும் பெட்டு கட்டல..ஊருக்கே நாமதான் இ.வா வோனு தோணுச்சு.
அப்பத்தான் அங்க வந்த மணியத்தான் பையன் சின்னவன் ரமேசு ஆறாங்கிளாஸ் படிக்கிறவன் பெட்டு கட்டுனான்.
நேத்து என்னையே ஏமாத்திட்டான் இந்தகவாணிப்பய இந்தப் பொடியன் எம்மாத்திரம்னு நினைச்சேன். ஆனா, அந்தக் களவாணிப்பய ரொம்ப நல்லவன் மாதிரி போ..போ நீ யெல்லாம் பெட்டு கட்டாதேனு விரட்டினான். ரமேசு கேக்குற மாதிரியில்லை..திருவிழாக்கு வந்திருக்குற விருந்தாளிங்கலாம் காசு கொடுத்திருப்பாங்க போல. புது பத்து ரூவா தாள் நாலஞ்சு வச்சிருந்தான் ரமேசு.எனக்கும் மனசு கேக்கல..எலே மருமனே, காச கரியாக்காதல, போய் எதாவது பண்டமாது வாங்கித் தின்னுல னு சொன்னேன்.
ரமேசு கேக்குற மாதிரி தெரியல..அந்தக் களவாணிப் பயலும் இவன் கையில பளபளத்த புது நோட்டை பாத்ததும் ஒன்னும் சொல்லல. கொஞ்ச நேரம் அந்த களவாணிப்பய ரமேச உத்து பாத்துட்டு என்னமோ பெரிய ஞானி மாதிரி
ரமேசை பாத்து “சரி பெட்டு சொல்லு” னு சொன்னான்.
ரமேசும், கரெக்ட்டா வலது பக்க டம்ளர்லதான் பெட்டு கட்டினான் 5 ரூவாய்க்கு.
ஆச்சரியம், அதுல பந்து இல்லை. அடுத்தடுத்து விடாம எல்லா காசையும் பெட்டு கட்டினான். நானும் கவனிச்சிட்டே தான் இருந்தேன். எல்லாமே சரியாத்தான் சொன்னான்..ஆனா எதுலயுமே பந்து இல்லை. ரமேசு ஐம்பது ரூவா விட்டுருப்பான் கிட்டத்தட்ட. இப்பஅழாத குறையா எல்லாத்தையும் விட்டுட்டுஎந்திரிச்சி போயிட்டான்.
எனக்கு வயித்தெரிச்சலாஇருந்துச்சு. அதுக்குள்ள ஒட்டககாரன் சங்கு ஊதின சத்தம் கேட்டு.. எல்லாரும் அங்கபோனாங்க..நானும் அவங்க கூட கிளம்பிட்டேன்.
நாலு நடை நடந்ததும், எதோ வேகம் நேரா அந்தக்களவாணிப்பயகிட்ட போய் இப்படி சின்னபயலை ஏமாத்தி சம்பாதிச்சிரிக்கியே நியாயமானு ஒரு வார்த்தை கேக்கனும் தோணுச்சி..சரினு திரும்பி அவன் டெண்டுகிட்ட போனேன்..அங்க அவன் சம்சாரமும் அவனை திட்டிட்டு இருக்கிறது காதுல விழுந்துச்சு
“ஏய்யா, அந்த சின்ன புள்ளைகிட்ட போயி இப்படி காச வாங்கனுமா? ஒரு தடவையாவது அவனை செயிக்கிற மாதிரி விட்டிருக்கலாம்ல, நீ யெல்லாம் மனுசனா னு” நான் நினைச்சதையே அவளும் சொல்லிட்டு இருந்தா.
வீட்டுக்கு வந்து கொடியில சட்டைய கழட்டி போட்டுட்டு படுத்ததும் அவர் சொன்ன வார்த்தை திரும்ப திரும்ப மனசுக்குள்ளேயே ஓடுது.
“அந்த அம்பது ரூபா அவனை இனி சூதாட்டம் பக்கமே போக விடாது, இந்த வயசுல அவன் கத்துக்குற பாடம் ஆயுசுக்கும் நிக்கும். நான் அவனை ஒரு ஆட்டம் செயிக்க வைச்சாகூட அது தப்பான உதாரணமாயிடும், சூதாட்டத்துல காசு செயிக்கலாம்னு அவன் மனசுல பதிஞ்சிடும். இப்ப அவன் தோத்த அம்பது ரூவாய் வாழ்க்கையில மறக்கமுடியாத பாடத்தை கத்து கொடுத்திருக்கும்”
அவர் சொன்னதுல ஒரு நியாயம் இருந்துச்சு. நானும் சின்னப் புள்ளையிலே இந்தமாதிரி ஏமாந்திருந்தா இப்ப பெட்டு கட்டியிருக்க மாட்டேன். அவர் ஞானிதான்.