திருவிழா ஞானம் - 1
திருவிழா ஞானம்
Swami
“ஒன்னு வைச்சா பத்து, பத்து வைச்சா நூறு, நூறு வைச்சா ஆயிரம்..அரிஷ்டம் கொட்டும் ஆட்டம், ஆடாம போனாதான் நட்டம்” என திருவிழா பஜாரில் கோவில் ரதவீதியில் கூவிக் கொண்டிருந்தவன் எல்லாரையும் ஈர்த்துக்கொண்டிருந்தான் என்னையும் சேர்த்து.
பாக்கெட்டில் இருந்த நூறுரூபாய் என்னை அவனிடத்தில் கொண்டு போய் விட்டது.
அவன் மூணு சிவப்பு டம்ளரில் ஒன்னுல பச்சை பந்தை வச்சி..மூணையும் கவுத்தி மாத்தி மாத்தி தலை சுத்துற மாதிரி மந்திரித்துவிட்டு எதுல பந்துஇருக்குனு பெட் கட்டச் சொன்னான். நான் கண்ணுல விளக்கெண்ணை போட்டுலா பாத்தேன்.. நடுல உள்ளதுலதான் இருக்கு.
ஒருத்தனும் பெட் கட்டல..
அவன் பீடிய பத்தவைச்சிகிட்டே ஒவ்வொரு டம்ளரா நிமித்தினான்…நான் நினைச்சது கரெட்டு. நடு டம்பளர்லதான் பந்து இருந்தது…
திரும்பவும்…ஒன்னு வைச்சா பத்து..பத்து வைச்சா நுறு னு..அதிர்ஷ்டத்தை அரிஷ்டம்னு அவன் சொன்னதை யாரும் கண்டுக்கல…எல்லாருக்கும் அவன் பந்துள்ள டம்பளரை எங்கநகத்துறான் ங்கிறதுதான் பார்வையா இருந்துச்சு.
இப்ப இடது பக்க டம்ளர் …நான் தெளிவா பாத்துட்டேன்..இப்பவும் ஒரு பய பெட் கட்டல…எவனுக்கும் என் அளவுக்கு கண்ணு தெரியாதோ என்னவோ…இப்ப டம்பளரை நிமித்தினான்…தே இடது பக்க டம்பளர்லதான் பந்து இருக்கு..அடடா பெட் கட்டிஇருக்கலாமோனு தோணுச்சி.
திரும்பவும் ஆரம்பிச்சுட்டான்…அரிஷ்டம் எனக்கு இருக்கிறதா உள்ளுக்குள்ள பட்சி சொல்லுச்சு..முதல்ல எதுக்கும் ஒத்த ரூபாயை வைப்போம்னு நினைச்சிட்டு இருக்கும்..பந்து உள்ள டம்பளர் எங்க போதுனு கவனமா பாத்துட்டே இருந்தேன்..இப்ப மத்தியில உள்ள டம்பளர்…மத்தி டம்பளர் ஒரு ரூபாய் பெட்னுநான் சொல்ல எல்லா ஆட்களும் என்னையே பாக்க..எனக்கு ஒருமாதிரி இருக்க..நல்ல வேளை அவன் பீடிய கீழப்போட்டுட்டு மத்தி டம்ளரை திறக்க பந்து அதுல இருந்தும்..எல்லாரும் கைதட்டினதுல எனக்கு கோடி ரூபா லாட்டரி விழுந்த மாதிரி…பக்கத்துல சரியா கண்ணு தெரியாதபெரிசு ஒன்னு காசை கட்டி ஏமாந்து போகாதீங்கள னு சொல்லிட்டு கூட்டத்தை விட்டு போனதை யாரும் கண்டுக்கல. அவன் டவுசருக்குள்ளே இருந்து பத்து ரூவாயை எடுத்து என்கிட்ட கொடுத்துட்டு ..திரும்பவும் ஒன்னு வைசௌசா பத்து…பத்து வைச்சா நூறு..நூறு வைச்சானு…சொல்லவும்..பாக்கட்டில இருந்து நூறுரூபா என் கைகக்கு வந்துட்டு…இப்ப வலது டம்ளர்…நல்லா பாத்துட்டேன்…
வலது பக்கம் நூறு பெட்டுனு நான் சொன்னதும்…என்ன மாதிரியே இன்னும் சிலர்..பத்து..நூறுனு வலது பக்க டம்ளர்ல பெட் வைக்க..எனக்கு பெருமையா இருத்ததுச்சு..நாம கரக்கிட்டா வைக்கிறது தெரிஞ்சி நாம சொல்றதுல பெட் வைக்கிறாங்கனு..
எல்லாரும் உத்து பாத்துட்டு இருக்கோம்..அவன் டம்பளரை நிமித்தாம ..வேறயாராவது பெட்டு வைக்கிறீங்களானு கேக்க..இன்னும் ஒருத்தன் பத்து ரூவாயை அதே வலது டம்ளரில சொல்லவும்..
எல்லாரும் காசை போடுங்கனு அவன் சொல்ல..என்ன மாதிரியே எல்லாரும் காசை அவன் முன்னாடி வைக்கவும்…அவன் வலது பக்க டம்பளரை நிமித்தினான்…எல்லாருமே அதிர்ந்து பாக்க உள்ள பந்து இல்லை..எப்படி இப்படிஆச்சுனு…யோசிக்கும் போதே கண்ணுக்குமுன்னாடியே என்நூறுரூவா என்னைபாத்து சிரிச்சிகிட்டே அவன் டவுசருக்குள்ளே போயிட்டு…வந்ததே வெறி எனக்கு..இன்னும் ஒருதடவை ஆட்டத்தை பொறுமையா பாத்துட்டு..அவன்கிட்ட ஜெயிச்ச அரிஷ்ட பத்து ரூபாயை வைச்சு என்நூறை திரும்ப வாங்கிடுவேனு மனசுக்குள்ள கறுவிட்டு நான் இருக்க… சிலர்போனாங்க சிலர் புதுசா வந்து சேர்ந்தாங்க…
ஒன்னு வைச்சா பத்து..பத்து வைச்சா நூறுனு அவன் சொல்லிகிட்டே டம்ளரை நகத்தும் போது..அவன் டவசருக்குள்ளே போய் உக்காந்த நூறு ரூபாவ நினைச்சு என் நெஞ்சு கணத்தது..இப்ப திரும்பவும் மத்தி டம்பளர் லதான் பந்து இருக்கு..நான் கம்முனு இருந்தேன்…பக்கத்துல இருந்தவன் சும்மா இல்லாம..என்னை பாத்து நீ பெட்டு கட்டலயானு கேக்க நான் கூட கட்டலாமானு யோசிச்சு..இல்லை அடுத்த ஆட்டம்னு மனசை கட்டுபடுத்திகிட்டேன்…எவனுமே பெட் கட்டல..நான் நினைச்சதுதான் சரி..மத்தி டம்ளர்லதான் பந்து…ஆகா கட்டி இருக்கலாமோ? பக்கத்துல கேட்டவன் கடவுள் மாதிரி நம்மள கட்ட சொன்னானோ னு..நினைச்சிகிட்டே பத்து ரூபாயை கையில எடுத்துகிட்டேன்..அடுத்த ஆட்டத்துக்கு…
திருவிழா முடிஞ்சி வீட்டுக்கு வந்து படுக்கும் போது மணி 12 ஆயிட்டு. வெளியில கொடில சட்டைய கழட்டிப் போட்டுட்டு படுத்தேன்…ஒரே புழுக்கம் உள்ளேயும் வெளியேயும்.
Swami: இதை ஒரு Web series மாதிரி…எழுதப் போறேன்…😁 எங்க ஊருல பத்து நாள் திருவிழா நடக்கும்..பத்து கதைகள்..